அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்களின் அரச அந்தஸ்தைப் பயன்படுத்தி, மற்றவர்களை ஏமாற்றித் தனிப்பட்ட ஆதாயம் தேடக்கூடாது என்று சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா கடுமையாக எச்சரித்துள்ளார்.
அரச குடும்ப அந்தஸ்து என்பது சட்டத்தை மீறுவதற்கான உரிமம் அல்ல என்று வலியுறுத்திய அவர், ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் சட்டத்தையும் விதிமுறைகளையும் மதித்து நடக்க வேண்டும் என்றார்.
அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் தவறான நடத்தை, ஒட்டுமொத்த அரச குடும்பத்தின் நற்பெயரையும் பாதிக்கக்கூடும் என்று அவர் சுட்டிக் காட்டினார். எனவே, சமூகத்துடன் பழகும் விதத்திலும், தங்களின் பொறுப்புகளை நிறைவேற்றுவதிலும் கண்ணியத்தையும் நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தமது ஆட்சியின் வெள்ளி விழாவையொட்டி, இன்று கிள்ளான் இஸ்தானா ஆலாம் ஷா அரண்மனையில் நடைபெற்ற அரச குடும்பத்தினருக்கான தேநீர் விருந்தில் உரையாற்றியபோது சுல்தான் இதனைத் தெரிவித்தார்.
மேலும், குடும்பத்தினரிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால், அவற்றை அமைதியாகத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களைப் பரப்புவதையும், பிறரைப் புண்படுத்தும் கருத்துகளை வெளியிடுவதையும் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் சிலாங்கூர் அரசியார் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின், பட்டத்து இளவரசர் தெங்கு அமீர் ஷா உள்ளிட்ட அரச குடும்பத்தினர் கலந்து கொண்டனர். ஏறத்தாழ 1,200 பேர் பங்கேற்ற இந்தச் சந்திப்பு, குடும்ப ஒற்றுமையையும் அரச குடும்பத்தின் கண்ணியத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை நினைவூட்டுவதாக அமைந்தது.








