வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்துவோருக்கு அபராதம் விதிப்பதற்குப் பதிலாக, நேரடியாகச் சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என்று பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
மக்களவையில் 2027-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது, புதிய பந்தாய் விரைவுச்சாலைக்கு அருகிலுள்ள கோயில் ஒன்றில் தெய்வச் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்தை அவர் சுட்டிக் காட்டினார்.
சமய உணர்வுகளை அவமதிக்கும் வகையில் வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்துவோர் மீது அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பிணை வழங்காமல் நேரடியாகச் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சமயத்தை அவமதிக்கும் நோக்கில் வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்துவது குற்றவியல் சட்டத்தின் 295-ஆவது பிரிவின்கீழ் குற்றமாகும். இதற்கு அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். பொதுமக்களின் அமைதியைப் பாதுகாக்க, இத்தகைய குற்றங்களுக்கு அபராதத்துக்குப் பதிலாகச் சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்றும் பிரபாகரன் தெரிவித்தார்.








