பிரான்ஸ், இத்தாலியில் நடைபெறும் போராட்டங்களால் மலேசிய மாணவர்கள் யாரும் காயமடைந்ததாகத் தகவல் இல்லை என்றும், அவர்களின் வளாகங்களுக்கான பயணங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உயர்கல்வி அமைச்சர் ஸம்ரி அப்துல் காடிர் தெரிவித்துள்ளார்.
பாரிஸ், மிலான் நகரங்களின் நிலவரத்தைத் தமது அமைச்சு, வெளியுறவு அமைச்சுடன் இணைந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.
போராட்டங்கள் மற்றும் மோதல்கள் நடைபெறும் பகுதிகளைத் தவிர்க்குமாறு, குறிப்பாக பிரான்ஸ், இத்தாலியில் உள்ள மலேசிய மாணவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால், மலேசியத் தூதரகங்களுக்கு அருகிலுள்ள பாதுகாப்பான இடங்களுக்கு மாணவர்களை மாற்றுவது உள்ளிட்ட அவசர நடவடிக்கைகளும் பரிசீலிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
எனினும், மாணவர்கள் ஏற்கெனவே வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனரா என்பதை உறுதிப்படுத்த முடியாது என்றும், அது குறித்து வெளியுறவு அமைச்சே பதிலளிக்க முடியும் என்றும் ஸம்ரி குறிப்பிட்டார். வாழ்க்கைச் செலவு உயர்வு, கல்வி நிதி, வீட்டு வசதி மற்றும் பொதுச் சேவைகள் தொடர்பான அதிருப்தியால் இந்தப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.








