சிரம்பான், ஆகஸ்ட்.21-
தனது மூன்று வளர்ப்பு மகன்களை பிவிசி குழாயினால் அடித்துக் காயப்படுத்தியதாக மின்டெக்னிஷன் ஒருவர் சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
44 வயது எம். சதிஸ்குமார் என்ற அந்த மின்டெக்னிஷன், நீதிபதி டத்தின் சுரிதா பூடின் மற்றும் நீதிபதி என். கனகேஸ்வரி ஆகிய இரு வெவ்வேறு நீதிபதிகள் முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலை 5.30 மணியளவில் சிரம்பான், தாமான் புக்கிட் முத்தியாராவில் உள்ள தனது வீட்டில் 15,16, 19 வயதுடைய தனது மூன்று வளர்ப்பு மகன்களை பிவிசி குழாயினால் கண்மூடித்தனமாக அடித்துக் காயம் விளைவித்ததாக சதிஸ்குமார் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
அந்த மூன்று பிள்ளைகளின் சொந்தத் தாயாரான 39 வயது ஆர். தாரணி என்பவர், அதே வீட்டில் தனது 16 வயது மகனுக்குக் கத்தியின் மூலம் காயம் விளைவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
சதீஸ்குமார் மூன்று குற்றச்சாட்டுகளையும், தாரணி ஒரு குற்றச்சாட்டையும் எதிர்நோக்கியுள்ளனர். எனினும் இருவரும் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியதால் சதிஸ்குமார் 33 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனிலும் தாரணி 5 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனிலும் விடுவிக்கப்பட்டனர்.








