கோலாலம்பூர், அக்டோபர்.18-
இந்திய சமுதாயத்திற்கு தமது தலைமையிலான மடானி அரசாங்கம் வழங்கி வரும் பல உதவித் திட்டங்கள் வெளியில் பரவலாகப் பேசப்படுவதில்லை என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது ஆதங்கத்தைத் தெரிவித்தார்.
இந்திய மக்கள் பிரதிநிதிகள் உட்பட தகவல் சாதனங்களும் அவற்றைப் பெரியளவில் படம் பிடித்துக் காட்டுவதில்லை, விவாதிக்கப்படுவதில்லை என்று டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
இதன் காரணமாகவே நடப்பு அரசாங்கம் ஒன்றுமே செய்யாதது போல் ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்று இன்று கோலாலம்பூர், கே.எல். செண்ரலில் இலக்கவியல் அமைச்சு ஏற்பாடு செய்த தீபாவளி திறந்த இல்ல நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
முன்பு, தெக்குன், அமானா இக்தியார் போன்ற திட்டங்கள் பூமிபுத்ராக்களின் திட்டமாக இருந்தது. அந்த திட்டங்கள் தற்போது இந்திய சமுதாயத்திற்குத் திறந்து விடப்பட்டுள்ளது. தொழில்முனைவோர், கூட்டறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் தலைமையேற்றப்பட்ட பின்னர் அவ்விரு திட்டங்களுக்கும் தலா 50 மில்லியன் ரிங்கிட்டை அரசாங்கம் வழங்கி வருகிறது.
மித்ராவிற்கு அரசாங்கம் வழங்கி வரும் 100 மில்லியன் ரிங்கிட் மட்டுமே அதிகமாக பேசப்படுகிறது. அது போதவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், இந்திய சமுதாயத்திற்கு அரசாங்கம் வழங்கி வரும் பல பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான திட்டங்களில் மிகச் சிறிய பகுதியே மித்ராவின் நிதியாகும்.
இதற்கு நல்லதோர் உதராணம் இந்திய சமுதாயத்திற்கான வீட்டுக் கடன் வசதி திட்டமாகும். அவர்களுக்கு வீடுகள் உள்ளன. ஆனால், சொந்த வீடுகள் கிடையாது. வீட்டு வாடகை அதிகமாகும். அவர்கள் சொந்த வீட்டை வாங்க வேண்டும் என்பதற்காக வீட்டுவசதி கடன் உத்தரவாதத் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தி, பெரிய நிதி ஒதுக்கீடும் வழங்கப்பட்டது.
அதைப் பற்றி யாரும் பேசவில்லை. இந்திய சமுதாயத்திற்காக STR, SARA உட்பட பல்வேறு திட்டங்களுக்கு அரசாங்கம் 200 கோடி ரிங்கிட் வரை ஒதுக்கி தந்துள்ளது. ஆனால் நாங்கள் எதையும் செய்யவில்லை என்பது போல், தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வருகிறோம் என்று பிரதமர் தமது உரையில் தெரிவித்தார்.