ஜோகூர் பாரு, ஜனவரி.12-
சிங்கப்பூருடனான இரு தரைவழி குடிநுழைவுச் சாவடிகளிலும் உள்ள இ-கேட் அமைப்பில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்பக் கோளாறு தற்போது முழுமையாக சரி செய்யப்பட்டு, மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக ஜோகூர் மாநில பொதுப்பணி, போக்குவரத்து, உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொடர்பு குழு ஆட்சிக்குழு உறுப்பினர் முஹமட் ஃபாஸ்லி முஹமட் சாலே தெரிவித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் மீண்டும் செயல்படத் தொடங்கிய இந்த இ-கேட் அமைப்பில், கோளாறு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இன்னும் முழுமையான விவரங்கள் வெளியிடப்படவில்லை.
என்றாலும், கடந்த சனிக்கிழமை முதல் இந்த தொழில்நுட்பக் கோளாறானது சுமார் 48 மணி நேரங்கள் நீடித்தது.
சுல்தான் இஸ்கண்டார் கட்டடத்தில் உள்ள குடிநுழைவில், உள்நுழைய 39 இ-கேட்களும், வெளியேற 29 இ-கேட்டுகளும் செயல்பட்டு வந்தன.
அதேவேளையில், சுல்தான் அபு பாக்கார் கட்டிடத்தில் உள்ள குடிநுழைவில், மொத்தம் 12 இ-கேட்டுகள் செயல்பாட்டில் இருந்தன.
இந்நிலையில், இந்த தொழில்நுட்ப முடக்கமானது, மலேசியர்களை பாதிக்கவில்லை என்றும், வெளிநாட்டினருக்கு மட்டுமே சிக்கலை ஏற்படுத்தியதாகவும் எல்லைக் கட்டுப்பாட்டு முகமையான ஏகேபிஎஸ் தெளிவுபடுத்தியுள்ளது.








