பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது ஹரிராயா திறந்த இல்ல பொது உபசரிப்பை பாஸ் கட்சி கட்டுப்பாட்டில் உள்ள 3 மாநிலங்களில் நடத்த முடிவு செய்திருப்பது அரசியல் எதிரிகளைச் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கெடா, கிளந்தான் மற்றும் திரங்கானு ஆகிய மாநில அரசாங்கங்கள் ஒரு போட்டிக் கூட்டணியிலிருந்து பிரதமருக்கு அன்பான விருந்தினர்களாக இருப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஏனெனில், அவர்கள் அரசியல் மதிப்பீட்டு புள்ளிகளைப் பெறுவதற்கு ஒரு சமய நிகழ்வைப் பயன்படுத்த முடியாது.
ஆறு மாநிலங்களின் தேர்தலை மனதில் வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்று அரசியல் ஆய்வாளர்கள் மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளனர்.
“இது அன்வாரின் அரசியல் வியூகமாகும். சாதாரண மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வாகவே மூன்று மாநிலங்களில் அன்வார் நடத்தும் இந்தத் திறந்த இல்ல பொது உபசரிப்பு பார்க்கப்படுகிறது.
“இது நிச்சயமாக ஜூன் இறுதியில் அல்லது ஜூலை தொடக்கத்தில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலுடன் தொடர்புடையது என்பதில் ஐயமில்லை என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.








