ஜார்ஜ்டவுன், பிப்ரவரி.21-
பயிற்சியின் போது மரணமடைந்த இளம் ராணுவ வீரர் கே. இந்திரனின் குடும்பத்தினரை, பகாங் இளவரசர் Tengku Panglima Perang Pahang Tengku Ahmad Ismail Mu'adzam Shah இன்று நேரில் சந்தித்துத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
பினாங்கு, தாமான் ஸ்ரீ நிபோங்கில் உள்ள இந்திரனின் இல்லத்திற்கு மதியம் 12.55 மணியளவில் வருகை தந்த இளவரசரை, பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் Sim Tze Tzin, மற்றும் மலேசிய ஆயுதப் படை உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
நாட்டின் இறையாண்மையைக் காக்கத் தனது திறன்களை மேம்படுத்திக் கொள்ளும் முயற்சியில் இருந்த ஓர் இளம் வீரரை இழந்தது குறித்து இளவரசர் தனது வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார். மறைந்த இந்திரனின் குடும்ப உறுப்பினர்களுடன் சிறிது நேரம் உரையாடிய அவர், அவர்களுக்குத் தனது ஆறுதலைக் கூறினார்.
பகாங் இளவரசரின் இந்த வருகை எங்களுக்குப் பெரும் மன வலிமையைத் தந்துள்ளது; எங்களின் துயரத்தில் பங்கெடுத்த அவரது கனிவான உள்ளத்திற்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என இந்திரனின் தாயார் எஸ். உஷா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இந்திரனின் தந்தை காயம்பூவும் ஒரு விமானப்படை வீரராகப் பணியாற்றி விபத்தில் உயிரிழந்தவர் என்பதால், அந்த வீரக் குடும்பத்தின் தியாகத்தைப் பாராட்டும் வகையில் இளவரசரின் இந்த வருகை அமைந்தது. ராணுவ மரபுகளின்படி இந்திரனின் குடும்பத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளும் முறையாகச் சென்றடைவதை உறுதிச் செய்யுமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்கு இளவரசர் அறிவுறுத்தினார். இந்தச் சந்திப்பு, சோகத்தில் மூழ்கியிருந்த அந்தத் இந்திய குடும்பத்திற்கு ஒரு பெரிய கௌரவமாகவும் நம்பிக்கையாகவும் அமைந்தது.








