நெகிரி செம்பிலான் மாநிலத்தின் மிக உயர்ந்த அரச சபையான 'டேவான் கெஅடிலான் டான் உண்டாங்’ அமைப்பின் சிறப்புக்கூட்டத்தைக் கூட்டுவதற்கும், அதன் செயலாளர் ராஜா நோராஸ்லி ராஜா நோர்டின்னைப் பதவியிலிருந்து நீக்குவதற்கும் சிரம்பான் உயர் நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசமைப்புச் சிக்கல்கள் குறித்து நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கும் வரை, தற்போதைய நிர்வாக நிலையை அப்படியே நீட்டிக்க நீதிபதி ரோஸ் மாவர் ரோஸைன் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இதன் மூலம், கூட்டங்களைக் கூட்டவோ, செயலாளரின் பணியில் தலையிடவோ அல்லது செய்தியாளர் சந்திப்புகளை நடத்தவோ வாதிகளான நான்கு உண்டாங் தலைவர்களுக்கும், ஷாபந்தார்ருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என மூத்த வழக்கறிஞர் ஸ்டீவன் திரு தெரிவித்தார்.
இந்த சர்ச்சை, நான்கு உண்டாங் தலைவர்களுக்கும் மாநில ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ்ஸுக்கும் இடையே நிலவி வரும் கருத்து வேறுபாடுகளால் ஏற்பட்டுள்ளது.
மாநில அரசியலமைப்பின்படி, ஆட்சியாளரின் அனுமதி இருக்கும் வரை ராஜா நோராஸ்லி செயலாளராக நீடிப்பார் என மாநிலச் செயலாளர் டத்தோ முகமட் ஜாஃபிர் இப்ராஹிம் நேற்று உறுதிப்படுத்தியிருந்தார்.








