பெண் ஒருவரி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக 25 வயதுடைய முகமது ஃபிக்ரி ரோஸ்லான் என்ற வேலையற்ற இளைஞருக்கு ஆயர் கெரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஐந்து மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மலாக்கா-பாந்தாய் குந்தூர் தஞ்சோங் கிளிங் நிகழ்ந்த இச்சம்பவத்தின் போது வீட்டில் தனியாக இருந்த 23 வயதுடைய அந்தப் பெண், தனது அறைக் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு அச்சமடைந்து கதவைத் திறக்காமல் இருந்துள்ளார். பின்னர் அங்கு வந்த அவரது காதலர், அந்த இளைஞர் வீட்டிற்குள் இருப்பதைக்கண்டு அவரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள தனது தாயாரைக் கவனிக்க வேண்டியிருப்பதால் தனக்குக் குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு அந்த இளைஞர் கோரிய போதிலும், பிறர் வீட்டிற்குள் அனுமதியின்றி நுழைவது குற்றமாகும் என்பதால் அவருக்குப் பொருத்தமான தண்டனை வழங்கப்பட வேண்டும் என அரசுத் தரப்பு வலியுறுத்தியது. இதனை அடுத்து, குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட அந்த இளைஞருக்கு மாஜிஸ்திரேட் உத்மான் அப்த் கனி ஐந்து மாத சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.








