கோலாலம்பூர், அக்டோபர்.06-
கோலாலம்பூர் புக்கிட் டாமான்சாராவில் 60 மாடிகளைக் கொண்ட கட்டடத்தைக் கட்டுவதற்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை என்று கோலாலம்பூர் மாநகர் மன்றம் இன்று விளக்கம் அளித்துள்ளது.
கோலாலம்பூர் ஜாலான் சமந்தானில் உள்ள ஓரிட மக்கள், அந்த பெரும் திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் அந்தத் திட்டத்திற்கு இன்னும் எந்தவோர் அனுமதியும் வழங்கப்படவில்லை என்று கோலாலம்பூர் மாநகர் மன்றம் தெளிவுபடுத்தியது.
கோலாலம்பூரில் உள்ள விஸ்மா டாமான்சாரா மறுமேம்பாட்டுத் திட்டத்தை எதிர்த்து கடந்த சனிக்கிழமை காலையில் புக்கிட் டாமான்சாராவில் வசிக்கும் முக்கியப் புள்ளிகள் உட்பட 100 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
அந்தத் திட்டம் கைவிடப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். முன்னாள் இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின், ஏர் ஆசியா கெப்பிடல் தலைமை செயல்முறை அதிகாரி டான் ஶ்ரீ டோனி பெர்னாண்டஸ், முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் சகோதரரும், ஆசியான் வணிக ஆலோசனைக் குழுமத்தின் தலைவருமான டான் ஶ்ரீ நஸிர் ரஸாக், பிரபல பாடகி டத்தோ ஷீலா மஜிட் ஆகியோர், போராட்டத்தில் குதித்தவர்களில் அடங்குவர்.








