ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.01-
முன்னாள் ஆசிரியர் ஒருவர் தனது வீட்டிற்குள் 32 டன் எடை கொண்ட குப்பைகளைச் சேகரித்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஜோகூர் பாரு, தாமான் செந்தோசாவில் உள்ள ஒரு தரை வீட்டில் 70 வயது மதிக்கத்தக்க அந்த முன்னாள் ஆசிரியர் சேகரித்து வைத்திருந்த குப்பைகளால் அண்டை வீட்டுக்காரர்களுக்கு பெரும் அசௌகரியத்தைத் தந்ததுடன், பெரும் சுகாதாரக் கேட்டை விளைவித்து வந்தது.
இது தொடர்பாக கிடைக்கப் பெற்ற புகாரின் அடிப்படையில் ஜோகூர் மாநகர் மன்ற ஊழியர்கள் சுற்றுச்சூழல் இலாகாவினர், போலீஸ்காரர்கள், 35 தொண்டூழியர்கள் ஆகியோரின் உதவியின் மூலம் அந்த வீட்டிற்குள் ஒதுங்குவதற்குகூட இடமின்றி மலைப்போல் குவிக்கப்பட்டிருந்த குப்பைகள் சிறப்பு நடவடிக்கையின் மூலம் கரைக்கப்பட்டு, அகற்றப்பட்டன.
சம்பந்தப்பட்ட முன்னாள் ஆசிரியரின் செயல், துர்நாற்றத்திற்கு வித்திட்டதுடன், பாம்பு, பூரான் போன்ற விஷ ஜந்துகளும் வீட்டிற்குள் அண்டுவதற்கும் வழிவகுத்துள்ளது என்று ஜோகூர் பாரு மாநகர் மன்ற உறுப்பினர் செல்லி ங் லியேட் யிங் தெரிவித்தார்.
காகித அட்டைகளுக்கு அப்பாற்பட்டு பழுதடைந்த மின்சாரப் பொருட்கள், ரைஸ் குக்கர், காலி டின்கள், வீசப்பட்ட காலணிகள், உடைந்த பிளாஸ்டிக் நாற்காலிகள் போன்றவை அகற்றப்பட்ட குப்பைகளில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.








