கோலாலம்பூர், செப்டம்பர்.03-
முதலாம் படிவ மாணவி ஸாரா கைரினா மகாதீர் மரணம் குறித்து அவதூறு ஏற்படுத்தியது மற்றும் இஸ்ரேலுடன் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமைத் தொடர்புப்படுத்தி, பொய்யானத் தகவல்களைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்து, அச்சுறுத்தலை ஏற்படுத்தியது தொடர்பில் இரண்டு டிக் டாக் கணக்கு உரிமையாளர்களுக்கு எதிராக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த இரண்டு டிக் டாக் கணக்கு உரிமையாளர்களையும் போலீசார் அடையாளம் கண்டு விட்டனர். அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதில் போலீசார் எந்த சிக்கலையும் எதிர்நோக்கவில்லை என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் சி.ஐ.டி. இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.
இவ்விருவரின் விவகாரத்தை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் D5 பிரிவு கையாளுகிறது. அவ்விருவருக்கும் எதிராக 1948 ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டமும், 1998 ஆம் ஆண்டு தொடர்பு, பல்லூடகச் சட்டமும் பிரயோகிக்கப்படவிருக்கிறது என்று டத்தோ குமார் குறிப்பிட்டார்.
உண்மைக்குப் புறம்பாக அவதூறுகளை ஏற்படுத்தும் தரப்பினருக்கு எதிராக எவ்வித சமரசத்திற்கும் இடமின்றி போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பர் என்று அவர் எச்சரித்தார்.








