கோலாலம்பூர், நவம்பர்.27-
மலாக்கா நீரிணை கடலோரப் பகுதியில் Senyar புயல் மையம் கொண்டு, தீவிரம் அடைந்து வருவதாக மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியா இன்று அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தென் சீனக் கடலில் உருவெடுத்த இந்தப் புயல், மெல்ல நகர்ந்து தற்போது மலாக்கா நீரிணையில் மையம் கொண்டுள்ளது. வலுவடைந்து வரும் அந்தப் புயல் கோலாலம்பூர், சிலாங்கூர், பகாங் முதலிய 3 மாநிலங்களைத் தாக்கக்கூடும். அடுத்த 24 மணி நேரம், மிக முக்கியமான காலக்கட்டமாக இருக்கும்.
இந்த மூன்று மாநிலங்களில் உள்ள மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மெட்மலேசியா தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் இன்று நடத்திய அவசர செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
மணிக்கு 24 கிலோமீட்டர் வேகத்தில் வீசி வரும் இந்தப் புயல் தற்போது வலுப் பெற்றுள்ளது. நாட்டின் பிற பகுதிகளைக் கடந்துச் செல்வதற்கு முன்பு கோலாலம்பூர், சிலாங்கூர், பகாங் முதலிய மாநிலங்களைக் கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் விளைவாக கனமழை, பலத்த காற்று, காற்றழுத்த தாழ்வு நிலை, கடல் கொந்தளிப்பு ஏற்படும். இந்த நிலை வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும். இக்காலக்கட்டத்தில் மழையளவு வழக்கத்திற்கு மாறாக 200 மில்லிமீட்டர் முதல் 300 மில்லிமீட்டர் வரை இருக்கும் என்ற எதிர்ப்பார்க்கப்படுவதாக டாக்டர் முகமட் ஹிஷாம் எச்சரித்துள்ளார்.








