Nov 5, 2026
Thisaigal NewsYouTube

மலாக்கா இந்திய வாக்காளர்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற சிவமலர் கணபதி வேண்டுகோள்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்கா இந்திய வாக்காளர்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற சிவமலர் கணபதி வேண்டுகோள்

தீபாவளி திருநாளை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மலாக்கா இந்திய வாக்காளர்கள், கூடுதல் பயணச் செலவையும் பொருட்படுத்தாமல் நவம்பர் 14ஆம் தேதி மீண்டும் திரும்பி வந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என பி.கே.ஆர். கட்சியின் துணைத் தலைமைச் செயலாளர் சிவமலர் கணபதி கேட்டுக் கொண்டார்.

மலாக்கா மாநிலத் தேர்தலை முன்னிட்டு, பக்காத்தான் ஹராப்பானின் தேர்தல் நடவடிக்கை மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தில் சுமார் 40 ஆயிரம் இந்திய வாக்காளர்கள் இருப்பதாகவும், சில சட்டமன்றத் தொகுதிகளில் இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை 17 விழுக்காடு வரை உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், பக்காத்தான் ஹராப்பான் சார்பில் காடெக் தொகுதியில் K. ஜெகசீலனும், அசஹான் தொகுதியில் P. டனேசும் இந்திய வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்திய சமூகத்தின் நலன், தமிழ்ப்பள்ளிகள் மற்றும் ஆலயங்கள் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுடன், மலாக்காவின் சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

எனவே தீபாவளிக் கொண்டாட்டங்களுக்கு மத்தியிலும் வாக்களிக்கும் உரிமையை இந்தியச் சமூகம் தவறவிடக்கூடாது என்றும் சிவமலர் கணபதி கேட்டுக் கொண்டார்.

நடந்து முடிந்த ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில்களின் இந்தியர்களின் வாக்களிப்பு எண்ணிக்கை குறைந்த நிலையில் மலாக்கா தேர்தலில் குறைந்த பட்சம் 60 அல்லது 70 விழுக்காடு இந்தியர்கள் தங்களின் ஆதரவை வழங்கி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று செய்தியார்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜார்ஜ் கேட்டுக் கொண்டார்.

இந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பிரதமரின் சிறப்பு பணிகளுக்கான அதிகாரி சண்முகம் மூக்கன், சங்கீதா ஜெயகுமார் உட்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →