மலேசிய இந்தியச் சமூகத்திற்கான அரசாங்கத்தின் உதவிகள், மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா மூலம் வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டுடன் மட்டும் நின்றுவிடவில்லை என்றும், அரசாங்கத்தின் பல்வேறு தேசிய அளவிலான மக்கள் நலத் திட்டங்களும் இந்தியச் சமூகத்திற்குப் பயனளித்து வருவதாகவும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சருமான அன்வார், மடானி அரசாங்கம் இந்தியச் சமூகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு, சிறப்பு நிதி ஒதுக்கீடுகளுடன் பல்வேறு பொதுவான மக்கள் நலத் திட்டங்களையும் செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
தீபாவளித் திருநாளை முன்னிட்டு இன்று மாலை 5 மணியளவில் கோலாலம்பூரில் இந்தியர்களின் முக்கிய வர்த்தகத் தளமாக பிரிக்பீல்ட்ஸில் தீபாவளி சந்தைக்கு வருகை தந்து, வர்த்தகர்கள் மற்றும் சிறு வியாபாரிகளை சந்தித்தப் பின்னர் பிரதான மேடையில் உரையாற்றுகையில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இந்தியச் சமூகத்திற்கான உதவிகள் மித்ராவுடன் மட்டுமே முடிந்துவிடுவதாகக் கூறப்படுவது தவறான கருத்து எனக் குறிப்பிட்ட பிரதமர், ரஹ்மா ரொக்க உதவித் திட்டமான எஸ்டிஆர் (STR), அமானா இக்தியார் மலேசியா, தெக்குன் நேஷனல் போன்ற பல்வேறு திட்டங்களின் வாயிலாகவும் இந்தியச் சமூகத்தினர் பயனடைந்து வருவதாக விளக்கினார்.
முன்னதாக, தெக்குன் மற்றும் அமானா இக்தியார் திட்டங்கள் பூமிபுத்ரா சிறு வணிகர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மற்ற சமூகத்தினரும் பயன்பெறும் வகையில் அவற்றின் வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளையில், இந்தியத் தொழில்முனைவோருக்கு உதவும் வகையில் மித்ராவுக்குக் கூடுதலாக 150 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.

மேலும், தமிழ்ப்பள்ளிகளின் பராமரிப்பு மற்றும் புதிய பள்ளிகளைக் கட்டுவதற்காக 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஜோகூர் மாநிலம், குளுவாங்கில் அமைந்துள்ள லாடாங் பாமோல் தோட்டத் தமிழ்ப்பள்ளி உட்பட மேலும் ஆறு பள்ளிகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, முந்தைய அரசாங்கங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய மடானி அரசாங்கத்தின் கீழ் மக்கள் நல உதவிகளுக்கான நிதி ஒதுக்கீடு பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அன்வார் சுட்டிக் காட்டினார்.
குறிப்பாக, ரஹ்மா ரொக்க உதவித் திட்டம் மற்றும் ரஹ்மா அடிப்படை உதவித் திட்டம் ஆகியவற்றுக்கான மொத்த நிதி ஒதுக்கீடு 2024ஆம் ஆண்டில் 16 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்துள்ளது. இது 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 6 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பிரிம் (BR1M) உதவியையும், 2022ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 8 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பிகேஎம் (BKM) உதவியையும் விட அதிகமாகும் என்றார்.

முன்னர் இது போன்ற உதவிகள் வழங்கப்படவில்லையா என சிலர் கேள்வி எழுப்புவதாகக் குறிப்பிட்ட அவர், உதவிகள் முன்பும் வழங்கப்பட்டன; ஆனால் அப்போது 6 பில்லியன் ரிங்கிட்டாக இருந்த நிதி ஒதுக்கீடு தற்போது 16 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது என்றும், குறிப்பாகக் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்குப் பெரும் ஆதரவாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மனித வள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, கூட்டரசு பிரதேசங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ, தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்ஸில், தேசிய ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ், மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன், போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில், புக்கிட் அமான் போலீஸ் தலைமையத்தின் சி.ஐ.டி. இயக்குநர் டத்தோ எம். குமார் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.








