நிபோங் திபால், ஜனவரி.03-
பினாங்கு, சுங்கை பாக்காப்பில் உள்ள ஓர் உணவகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முகமூடி அணிந்த கும்பல் ஒன்று கூர்மையான ஆயுதத்தினால் தாக்கி, ஆடவர் ஒருவருக்கு மரணம் விளைவித்ததுடன் மேலும் இருவருக்கு கடும் காயங்கள் விளைவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் மேலும் 10 பேரைக் கைது செய்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இத்துடன் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 பேராக உயர்ந்துள்ளது என்று பினாங்கு மாநில போலீஸ் தலைவர் அஸிஸி இஸ்மாயில் தெரிவித்தார்.
சம்பவம் நிகழ்ந்த அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் செபராங் பிறை செலாத்தான் மற்றும் தைப்பிங்கில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
24 க்கும் 54 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த 14 பேரும் பினாங்கு மாநிலத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்த குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் பத்து பேருக்கு போதைப் பொருட்களைப் கடத்தல் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகள் தொடர்பில் பல்வேறு குற்றப்பதிவுகள் இருப்பதாக அஸிஸி இஸ்மாயில் தெரிவித்தார்.








