கோலாலம்பூர், பிப்ரவரி.08-
கோலாலம்பூர் சோகோ வணிக வளாகம் அருகே நேற்று கைது செய்யப்பட்ட GARAH பேரணி ஒருங்கிணைப்பாளர் ஸம்ரி வினோத் - தாமிம் டஹாரி ஆகியோருக்கு இரண்டு நாள் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்த இருவரையும் இன்று முதல் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாகக் கோலாலம்பூர் காவற்படைத் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் உறுதிப்படுத்தினார்.
தடையை மீறிப் பேரணி நடத்த முயன்றது தொடர்பாக ஸம்ரி வினோத் உட்பட மொத்தம் 19 பேரைக் காவற்படை கைது செய்திருந்த நிலையில், இவர்களில் இருவர் மட்டும் மேலதிக விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக இந்தப் பேரணிக்கு முன்பே அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பாகப் பல்வேறு தரப்பிலிருந்து 131 புகார்கள் வந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.








