மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், சொத்து அறிவிப்பு நோட்டீஸைப் பெறுவதற்காக, தனது 12 வயது மகனை, அதன் தலைமையகத்திற்கு வரவழைத்ததாக முன்னாள் மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் குற்றம் சாட்டியுள்ளார்.
அந்த நோட்டீஸை அச்சிறுவனின் பெற்றோரான தன்னிடமே வழங்கியிருக்கலாம் என்று குறிப்பிட்ட அவர், 12 வயது சிறுவன் ஏன் நேரில் வர வேண்டும்? அந்த சிறுவனை ஏன் இவ்வளவு மன அழுத்தத்துக்கும் கவலைக்கும் உள்ளாக்க வேண்டும்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேவேளையில் தனது சொத்துகளை அறிவிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், எஸ்பிஆர்எம் விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் கூறிய சரவணன், தனது மகன் ஏன் இந்த நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதே தன்னுடைய கவலை எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய சட்டம் 2009-ன் பிரிவு 36(1)(b)-ன் கீழ், விசாரணைக்கு உட்பட்ட ஒருவரின் உறவினர் அல்லது தொடர்புடைய நபரிடம் சொத்துகள் தொடர்பான தகவல்களை உறுதிமொழியுடன் எழுத்துப்பூர்வமாக வழங்குமாறு எஸ்பிஆர்எம் அதிகாரிகள் கோர முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எழுத்துப்பூர்வ நோட்டீஸுக்கு இணங்கத் தவறுவது குற்றமாகக் கருதப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை, எஸ்பிஆர்எம் தலைமை அதிகாரி அப்துல் ஹாலிம் அமான் வெளியிட்டிருந்த தகவலில், சரவணன், அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுக்கும் சொத்து விவரங்களை அறிவிக்க எஸ்பிஆர்எம் நோட்டீஸ் அனுப்பும் எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் சொத்து விவரங்களை சமர்ப்பிக்க குடும்பத்தினருக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்றும், தேவைப்பட்டால் கால அவகாசம் நீட்டிக்கப்படலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.
அதன் படி, இன்று திங்கட்கிழமை சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர், எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு நோட்டீஸ்களைப் பெறுவதற்காக வருகை புரிந்தனர்.








