கோலாலம்பூர், அக்டோபர்.08-
சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக ஒரு மலேசியப் பிரஜையான பன்னீர் செல்வம் பரந்தாமனுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இன்று அதிகாலையில் சிங்கப்பூர் சாங்கி சிறைச்சாலையில் 38 வயதான பன்னீர் செல்வத்திற்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதை சிங்கப்பூரைத் தளமாக கொண்ட ஓர் அரசு சாரா அமைப்பான Transformative Justice Collective உறுப்பினர் Rocky Howe உறுதிப்படுத்தினார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு 51.84 கிராம் போதைப் பொருளைக் கடத்தியதற்காக கடந்த 2017 ஆம் ஆண்டு மே 2 ஆம் தேதி குற்றவாளி என்று தீர்ப்பளித்த சிங்கப்பூர் உயர் நீதிமன்றம், பன்னீர் செல்வத்திற்குத் தூக்குத் தண்டனை விதித்தது.
தூக்குத் தண்டனையை எதிர்த்து, அந்த மலேசியப் பிரஜை செய்து கொண்ட மேல்முறையீட்டை சிங்கப்பூர் அப்பீல் நீதின்றம் தள்ளுபடி செய்தது. பொது மன்னிப்பு கோரி, சிங்கப்பூர் அதிபருக்கு பன்னீர் செல்வம் செய்து கொண்ட மேல்முறையீட்டு மனுவும் நிராகரிக்கப்பட்டது.
கடும் சட்டப் போராட்டங்களுக்கு மத்தியில் பேரா, ஈப்போவைச் சேர்ந்த பன்னீர் செல்வத்திற்கு நிறைவேற்றப்படவிருந்த தூக்குத் தண்டனை இரண்டு முறை நிறுத்தப்பட்ட நிலையில், இன்று அதிகாலை தண்டனை நிறைவேற்றப்பட்டதாக Rocky Howe தெரிவித்தார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு இதே போன்ற குற்றத்திற்கு ஒரு மலேசியப் பிரஜையான 39 வயது கே. தட்சணாமூர்த்திக்கு சிங்கப்பூர் தூக்குத் தண்டனையை நிறைவேற்றியது.








