மனிதவள அமைச்சின் அட்டேக் (ADTEC) தொழில்நுட்பக் கல்வி நிறுவனப் பட்டதாரிகளின் வேலை வாய்ப்புப் பெறும் விகிதம் 2026ஆம் ஆண்டில் 98 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இவர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்களின் திருப்தி விகிதமும் 97.2 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது.

தொடர்ச்சியான பயிற்சி, தொழில்நுட்பத் திறன்கள், டிஜிட்டல் ஆற்றல் ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் போட்டித்தன்மை கொண்ட திறமையான பணியாளர்களை உருவாக்க முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.

அதேவேளையில் வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்தும் வகையில் மைஃபுயூச்சல்ஜாப்ஸ் இணையவாசலில் சுமார் நான்கு லட்சம் வேலைவாய்ப்புகளும், ஜெலாஜா ஏஐ மைமாஹிர் திட்டத்தின் மூலம் 22 ஆயிரம் இலவச செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி வாய்ப்புகளும் வழங்கப்படுவதாக அவர் கூறினார்.

தனது சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில், கோத்தா டாமான்சாரா, செக்ஷன் 7 பல்நோக்கு மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற மடானி கீத்தா நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்து அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு, திறன் பயிற்சி, அரசாங்க உதவிகள் உள்ளிட்ட தகவல்களைப் பெறுவதற்காக 26 அரசாங்கச் சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
தேசிய பாதுகாப்பு தலைமை இயக்குநர் டத்தோ ராஜா நுஷிர்வான் ஸைனால் அபிடின், ஆகேஎம் துணை தலைமை இயயக்குநர் டத்தின் சலிஸா மொக்தார், கோத்தா டாமன்சாரா சட்டமன்ற உறுப்பினர் முஹமட் இஸுவான் அஹ்மாட் காசீம் , மனித வள அமைச்சரின் அரசியல் செயலாளர் அய்ஸுடின் அப்துல் காஃபால் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.








