நெகிரி செம்பிலான் மாநிலத்தின் பல பள்ளிகளில் சந்தேகத்திற்குரிய பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் என கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாட்லீனா சீடேக் வலியுறுத்தியுள்ளார்.
பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரின் பாதுகாப்புக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இச்சம்பவத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்த போலீஸ் துறை, பள்ளி நிர்வாகங்கள் மற்றும் மாநிலக் கல்வித் துறைக்கு பாராட்டுத் தெரிவித்தார்.
நேற்று நீலாய், தம்பின் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சந்தேகப் பொட்டலங்கள் தொடர்பாக போலீசாருக்கு ஒன்பது புகார்கள் கிடைத்தன. சோதனையில் அவற்றில் கோதுமை மாவும் பிளாஸ்டிக் தட்டுகளும் இருந்தது தெரியவந்தது. வெடிபொருட்களோ ஆபத்தான பொருட்களோ கண்டறியப்படவில்லை. இருப்பினும், பொட்டலங்களை அனுப்பியவர்கள் யார், அவர்களின் நோக்கம் என்ன என்பதைக் கண்டறிய விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.








