பாடாங் பெசார், நவம்பர்.23-
தெற்கு தாய்லாந்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பெருக்கு காரணமாக, கடந்த வெள்ளிக்கிழமை முதல் பாடாங் பெசார்-Hatyai இடையேயான தொடர்வண்டிச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கேடிஎம்பி தெரிவித்துள்ளது. Sadao, Songkhla மாகாணத்தில் உள்ள Khlong Ngae தொடர்வண்டி நிலையம் அருகே நீர்மட்டம் உயர்ந்ததால், பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த வழித்தடம் மூடப்பட்டதாக கேடிஎம்பியின் செயல்பாட்டு நிர்வாகி முகமட் ஃபாரிஸ் சே லா தெரிவித்தார்.
வெள்ள நிலைமை முழுமையாகச் சீராகி, அதிகாரிகள் பாதுகாப்பை உறுதிச் செய்த பின்னரே தொடர்வண்டிச் சேவை மீண்டும் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். சேவை நிறுத்தத்தால், வார இறுதி நாட்களில் வழக்கமாக நிரம்பி வழியும் பாடாங் பெசார் தொடர்வண்டி நிலையப் பகுதியில் உள்ள உணவு விடுதிகளில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 90 விழுக்காடு குறைந்துள்ளதால், வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வணிகர்கள் கவலை தெரிவித்தனர்.








