மலேசியாவிற்கு பில்லியன் கணக்கில் இழப்பை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எதிர்நோக்கும் தப்பியோடிய தொழிலதிபர் தேக் ஜோ லோ என்ற ஜோ லோக்கு எந்தவித மன்னிப்பும் வழங்கப்படாது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஜோ லோ தொடர்பாக தாம் கூறிய கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்றும், ‘பரிசீலனையில் இல்லை’ என்று தாம் கூறியதன் பொருள், அவர் மன்னிப்பு கோரினாலும் அதை நாம் பரிசீலீக்கப் போவதில்லை என்ற அர்த்தம் கொண்டது என்றும் அன்வார் விளக்கமளித்துள்ளார்.
மேலும், வெள்ளிக்கிழமை வெளியான சில ஊடகச் செய்திகள் மலேசியாவின் நிலைப்பாட்டை தவறாக பிரதிபலித்ததாகவும், இந்த விவகாரத்தில் அரசாங்கத்திற்கு மன்னிப்பு வழங்கும் சிந்தனையே இல்லை என்றும் அன்வார் தெளிவுபடுத்தியுள்ளார்.
உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய நிதி மோசடிகளில் ஒன்றான 1எம்டிபி மோசடியின் மூளையாக செயல்பட்டதாக, அமெரிக்க அதிகாரிகளால் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜோ லோ, சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிடம் மன்னிப்பு கோர.
விண்ணப்பித்துள்ளதாக கடந்த வாரம் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டால், அமெரிக்காவில் ஜோ லோ மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் கைவிடப்படலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்க நீதித்துறை அமைச்சின் இணையதளத்தில் “தேக் ஜோ லோ” என்ற பெயரில் “தண்டனைக்குப் பிறகான பொதுமன்னிப்பு” எனும் மன்னிப்பு விண்ணப்பம் “நிலுவையில்” இருப்பதாகவும் அதே அறிக்கை குறிப்பிட்டுள்ளது








