ஒவ்வொரு நிறுவனத்திலும் உள்ள நேர்மைப் பிரிவுகள், ஊழல் ஏற்பட்ட பின்னர் புகார்கள் மற்றும் நடவடிக்கைகளை கையாளும் பிரிவுகளாக மட்டும் இல்லாமல், ஊழல் அபாயங்களை முன்கூட்டியே கண்டறியும் முக்கியப் பங்காளிகளாக செயல்பட வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் வலியுறுத்தியுள்ளார்.
நிறுவனங்களின் கட்டமைப்பு ரீதியான பலவீனங்களைக் கண்டறிந்து அவற்றைச் சரிசெய்வதிலும், நேர்மையான பணிச்சூழலை உருவாக்குவதிலும் இந்தப் பிரிவுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
நல்ல நிர்வாகம், வலுவான கட்டுப்பாட்டு முறைகள், கல்வி மற்றும் பணியிடக் கலாசாரம் மூலம் ஊழல் நடைபெறுவதற்கு முன்பே அதன் வாய்ப்புகளைக் குறைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஊழல் தடுப்பு நடவடிக்கையின் வெற்றியை கைதுகள், குற்றச்சாட்டுகள் அல்லது தண்டனைகளின் எண்ணிக்கையைக் கொண்டு மட்டும் அளவிடக்கூடாது. மாறாக, ஊழலுக்கான வாய்ப்புகளை எவ்வளவு மூட முடிந்துள்ளது என்பதே முக்கியம் என்றும் ஜொஹாரி குறிப்பிட்டார்.








