கோலாலம்பூர். ஆகஸ்ட்.04-
நெகிரி செம்பிலான் மாநில ஜசெக மூத்த உறுப்பினர்கள் இயக்கம், தங்கள் ஆட்சேப நடவடிக்கைக்குப் பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் சனிடெரி நெப்கினை ஒரு பொருளாகப் பயன்படுத்தியிருப்பதை அக்கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவி தியோ நீ சிங் கண்டனம் தெரிவித்தார்.
பெண்களின் சுகாதாரப் பொருளாகப் பயன்படுத்தப்படும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளை முகத்தில் கட்டிக் கொண்டு, மூத்த உறுப்பினர்கள் பொதுவில் காட்சிப்படுத்தியிருப்பது, பெண்களின் இயற்கை உபாதைக்கு உதவும் அப்பொருளை அவமதிக்கும் செயல் என்று தொடர்புத் துணை அமைச்சருமான தியோ நீ சிங் குறிப்பிட்டார்.
எத்தனையோ பெண் பிள்ளைகள், சனிடரி நெப்கினை வாங்குவதற்குக் கூட வழியின்றி, தங்கள் பள்ளிப் படிப்பை நிறுத்திக் கொண்டுள்ள சம்பவங்கள் மத்தியில் அந்த சுகாதாரப் பொருளை ஆட்சேப நடவடிக்கை என்ற பெயரில் பயன்படுத்தி விரயமாக்கியிருப்பது கண்டிக்கத்தக்க நடவடிக்கையாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
நெகிரி செம்பிலான் மாநிலத்திற்கு உரிய செனட்டர் பதவி, வெளி மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஜசெக.வின் அந்த மூத்த உறுப்பினர்கள், சனிடெரி நெப்கினை முகத்தில் கட்டிக் கொண்டு நேற்று ஆட்சேப நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
ஜசெக தலைமைத்துவம் எந்தகைய நடவடிக்கையை மேற்கொண்டாலும் நெகிரி செம்பிலான் மாநில ஜசெகவினர், கண்டும், காணாமல், வாய்மூடி மெளனியாக இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாகத் தாங்கள் சனிடெரி நெப்கினை மையமாகக் கொண்டு இந்த ஆட்சேப நடவடிக்கையில் ஈடுபட்டதாக அந்த மூத்த உறுப்பினர்கள் வியாக்கியானம் கூறினர்.








