பாஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாலஸ்தீன ஒருமைப்பட்டு வாரத்தை நடத்தும்படி கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ள வேளையில் ஒரு பள்ளியில் மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர்கள் மாதிரி துப்பாக்கிகளை காட்டிக்கொண்டு இருந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் டிஏபி வருத்தம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் அடக்குமுறைக்கு எதிராக பாலஸ்தீனர்களுக்கு ஆதரவு நல்கும் வகையில் பள்ளிகளில் நடத்தப்படும் இந்த ஒருமைப்பாட்டு வாரத்தில் வன்முறைகளுக்கு வித்திடக்கூடிய மாதிரி ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. இது கண்டிக்கத்தக்க நடவடிக்கையாகும் என்று டிஏபி தெரிவித்துள்ளது.
பள்ளி மாணவர்கள் மத்தியில் ஆயுதமேந்திய வன்முறை கூறுகளை வெளிப்படுத்தக்கூடிய எந்தவொரு மாதிரி செயல்திட்டத்தையும் டிஏபி கடுமையாக எதிர்கிறது. வன்முறை கூறுகளுக்கு மலேசியாவில் இடம் அளிக்கக்கூடாது என்று அது திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள் நமது இளம் தலைமுறையினருக்கு தவறான செய்தியையும், முன்னுதாரணத்தையும் வழங்குகிறோம். பள்ளிகளில் இத்தகைய நிகழ்வுகளை நடத்த தூண்டும் தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று டிஏபி கேட்டுக்கொண்டுள்ளது.








