Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மே 13 கலவரத்தை மேற்கோள் காட்டுவதா? நாடாளுமன்றத்தில் பெண்டாங் எம்.பி.க்கும் ஆர்எஸ்என் ராயருக்கும் கடும் வாக்குவாதம்
தற்போதைய செய்திகள்

மே 13 கலவரத்தை மேற்கோள் காட்டுவதா? நாடாளுமன்றத்தில் பெண்டாங் எம்.பி.க்கும் ஆர்எஸ்என் ராயருக்கும் கடும் வாக்குவாதம்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.04-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்துள்ள 13 ஆவது மலேசியத் திட்டத்தில் பூமிபுத்ரா சமூகத்தை மேம்படுத்துவதற்கு எந்தவொரு முன்முயற்சியும் எடுக்கப்படவில்லை என்றும், மே 13 கலவரத்தை மீண்டும் ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறதா? என்றும் பெரிக்காத்தான் நேஷனலின் பெண்டாங் எம்.பி அவாங் ஹாஷிம் எழுப்பிய சர்ச்சைக்குரிய கேள்வியினால் இன்று நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பெண்டாங் எம்.பி அவாங் ஹாஷிமும், ஜெலுதோங் எம்.பி ஆர்எஸ்என் ராயரும் கடும் வாய்ச் சண்டையில் ஈடுபட்டனர்.

13 ஆவது மலேசியத் திட்டத்தில் பூமிபுத்ரா சமூகத்திற்கு நிறைவான அனுகூலங்கள் இல்லையென்றால், எத்தகைய அனுகூலங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை பெண்டாங் எம்.பி அவாங் ஹாஷிம் பரிந்துரைக்க வேண்டுமே தவிர ஒரு கருப்பு வரலாறாக அமைந்த மே 13 கலவரத்தை மீண்டும் ஞாபகப்படுத்தி, முன்னுதாரணம் காட்டுவது இன விவகாரத்திற்கு மீண்டும் தீ மூட்டும் வேலையாகும் என்று ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தினார்.

இனத்துவேஷத் தன்மையில் ஈடுபட்டுள்ள பெண்டாங் எம்.பி.க்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற நிலையாணை 36 C பிரிவை மேற்கோள் காட்டி ஆர்எஸ்என் ராயர் வாதிட்ட போது, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என இரு தரப்பிலும் கடும் வாக்குவாதமும், மோதல்களும் வெடித்தன.

Related News