புத்ராஜெயா, ஜனவரி.30-
சிங்கப்பூரில் உள்ள தனது மகளைச் சந்திப்பதற்காக, முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரசாக்கின் மனைவி டத்தின் ஶ்ரீ ரோஸ்மா மன்சூர், தனது கடப்பிதழைத் தற்காலிகமாகத் திரும்பப் பெற விடுத்த கோரிக்கையை, புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதித்தது. இதன்படி, ஏப்ரல் 30-ஆம் தேதி வரை ரோஸ்மாவின் கடப்பிதழ் அவரிடம் இருக்கும்.
நீதிபதிகள் Azmi Ariffin, Noorin Badaruddin மற்றும் Meor Hashimi ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் குழுவினர் முன்னிலையில் நடைபெற்ற ஆன்லைன் விசாரணையில், ரோஸ்மாவின் வழக்கறிஞர் ஜக்ஜித் சிங் இந்த விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தார்.
இந்த விண்ணப்பத்திற்கு அரசு தரப்பு துணை வழக்கறிஞர் கே. மங்கை எதிர்ப்பு தெரிவிக்காததால், நீதிபதி அஸ்மி தலைமையிலான நீதிபதிகள் குழுவினர், இதற்கு அனுமதி வழங்கினர்.
முன்னதாக, வரும் பிப்ரவரி 1 முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை சிங்கப்பூர் செல்வதற்காக, முடக்கப்பட்டுள்ள தனது கடப்பிதழை வழங்கக் கோரி ரோஸ்மா விண்ணப்பித்ததாக ஜக்ஜித் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், சூரியசக்தி திட்ட ஊழல் வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி ஜைனி மஸ்லானை நீக்கக் கோரி ரோஸ்மா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு பிப்ரவரி 25-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இதற்காக அவர் பிப்ரவரி 20 முதல் 26 வரை கோலாலம்பூருக்குத் திரும்புவார் என்றும் வழக்கறிஞர் தெரிவித்தார்.








