குளுவாங், ஜனவரி.30-
முறையான அனுமதியின்றி துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் போதைப் பொருள் வைத்திருந்ததாக 60 வயதைக் கடந்த தம்பதியினர் மீது இன்று குளுவாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
61 வயதான Koh Yaw மற்றும் அவரின் கணவரான 64 வயது ஓங் கிம் சூ ஆகிய இருவரும், நீதிபதி முஜிப் சரோஜி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி 22-ஆம் தேதி நள்ளிரவு 12:30 மணியளவில், தாமான் ஸ்ரீ குளுவாங்கில் உள்ள ஒரு வீட்டில் Taurus Brasil ரக ரிவால்வர் துப்பாக்கி, 33 தோட்டாக்கள் மற்றும் சுமார் 84.54 கிராம் எடையுள்ள கஞ்சாவை வைத்திருந்ததாக இத்தம்பதியர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 14 ஆண்டுகள் சிறை மற்றும் 6 பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் 1971 ஆம் ஆண்டு துப்பாக்கி சட்டத்தின் கீழ் இவர்களுக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதே வேளையில் 1952-ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக மற்றொரு குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.








