புத்ராஜெயா, ஜனவரி.30-
உயர்மட்ட தலைவர்கள் உட்பட அரசாங்கப் பணிகளில், லஞ்ச ஊழலில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது எந்த ஒரு சமரசமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஷாம்சுல் அஸ்ரி அபு பாக்கார் தெரிவித்துள்ளார்.
அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பாக அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கைது நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் முழுமையாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்படுவதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பும் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
அதிகாரத் துஷ்பிரயோகம், ஊழல் மற்றும் நிர்வாக முறைகேடுகளுக்கு எதிரான அரசாங்கத்தின் இந்த கடும் நடவடிக்கைகளானது, பொதுச் சேவையின் நம்பகத்தன்மை களங்கப்படாமல் இருப்பதை உறுதிச் செய்வதாகவும் ஷாம்சுல் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிரான கொள்கையானது, நாட்டின் முக்கிய நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைக்கக்கூடிய நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு மிக முக்கியக் காரணமாக இருப்பதை ஷாம்சுல் சுட்டிக் காட்டியுள்ளார்.
மலேசியா மடானி அரசாங்கத்தின் இலக்குகளுக்கு ஏற்ப, தேசிய வருவாயில் ஏற்படும் இழப்புகளைக் குறைப்பதற்கும், தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் உட்பட, திறமையான பொதுச் சேவை வழங்கலுக்கு நேர்மையே அடித்தளமாக இருக்க வேண்டும் என்றும் ஷாம்சுல் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஓராண்டாக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் உட்பட அமலாக்க முகமைகளால் எடுக்கப்பட்ட தொடர்ச்சியான உறுதியான நடவடிக்கைகள், பொதுச் சேவையின் நேர்மையை வலுப்படுத்துவதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் ஷாம்சுல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.








