கோலாலம்பூர், ஜனவரி.30-
இந்தியாவிற்குப் பயணம் செய்யும் மலேசியர்கள் நிபா வைரஸ் தொற்றுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு புதுடெல்லியில் உள்ள மலேசியத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
நிபா வைரஸ் தொற்று பதிவாகியுள்ள பகுதிகளுக்குச் செல்லும் மலேசியர்கள், பொது இடங்களில் முகக்கவசம் அணியுமாறும், முடிந்தவரை கூட்டமான இடங்களைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மலேசிய சுற்றுலாப் பயணிகளும், இந்தியாவில் தங்கியிருக்கும் மலேசியர்களும் அடிக்கடி கைகளைக் கழுவுவது உட்பட, கடுமையான தனிப்பட்ட சுகாதாரத்தைப் பேணுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, நீரில் சுத்தம் செய்யப்படாத பழங்கள் அல்லது அசுத்தமான உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, இந்தியாவில் நிபா வைரஸ் குறித்த நிலவரங்களை தீவிரமாகக் கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள மலேசியத் தூதரகம், உடனுக்குடன் அது குறித்த தகவல்களை வழங்கவிருப்பதாகவும் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.








