கோலாலம்பூர், ஜனவரி.30-
கோலாலம்பூரில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையின் போது, வெளிநாட்டினர் பயன்படுத்திய உள்ளூர் வாகனங்களில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டதையடுத்து, புதிய கட்டுப்பாடு ஒன்றைச் சாலைப் போக்குவரத்துத் துறையான ஜேபிஜே விதித்துள்ளது.
வெளிநாட்டினரைத் தங்கள் வாகனங்களைச் சட்டவிரோதமாக ஓட்ட அனுமதிக்கும் மலேசிய வாகன உரிமையாளர்கள் மீது கோலாலம்பூர் ஜேபிஜே நடவடிக்கை எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓபராசி பெமாண்டு வர்கா ஆசிங் என்ற பெயரில் அண்மையில் நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கையின் போது, மலேசியர்களின் பெயரில் பதிவாகியிருந்த வாகனங்கள் பலவற்றை, முறையான ஆவணங்கள் இன்றி வெளிநாட்டினர் பயன்படுத்தி வந்ததால், அவை பறிமுதல் செய்யப்பட்டதாக கோலாலம்பூர் ஜேபிஜே இயக்குநர் ஹாமிடி அடாம் தெரிவித்துள்ளார்.
என்றாலும், மலேசிய வாகனங்களை முறையான ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆவணங்களுடன் பயன்படுத்தும் வெளிநாட்டினருக்கு எந்த ஒரு தடையும் இல்லை என்றும் ஹாமிடி அடாம் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், அந்த வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சட்டவிரோத செயல்களுக்கு சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளரே பொறுப்பானவராவார் என்றும் ஹாமிடி அடாம் தெரிவித்துள்ளார்.








