கோல திரங்கானு, ஜனவரி.30-
கோல திரங்கானு மாவட்டம் கம்போங் சிம்பாங் தோக் கூவில் உள்ள விளையாட்டுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில், அக்கடையானது முற்றிலும் எரிந்து தீக்கிரையானது.
கடந்த 5 ஆண்டுகளாக அக்கடையை நடத்தி வந்த அதன் உரிமையாளர்களுக்கு இவ்விபத்து காரணமாக 1மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு 7.40 மணியளவில் நடந்த இச்சம்பவத்தின் போது, கடையில் இருந்த 10 ஆயிரம் ரிங்கிட் ரொக்கத் தொகை உட்பட மொத்த பொருட்களும் தீயில் எரிந்து நாசமானதாக அதன் உரிமையாளர் மாயா சுஹைடி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கோல திரங்கானு தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவைச் சேர்ந்த சுமார் 24 வீரர்கள், அரைமணி நேரத்திற்கும் மேல் போராடி, தீயை அணைத்ததாக, அதன் தலைவர் தொயிபா தையிப் குறிப்பிட்டுள்ளார்.








