கோலாலம்பூர், ஜனவரி.30-
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இராணுவ நல நிதியிலிருந்து 5 மில்லியன் ரிங்கிட் முறைகேடு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று தான் குற்றமற்றவர் என வாதிட்டார்.
இராணுவ கூட்டு ஆயுதப்படைத் தலைமையகத்தின் தலைமை அதிகாரியானஃபௌஸி காமிஸ், நீதிபதி சுஸானா ஹுசேன் முன்னிலையில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பிறகு, தனது வாக்குமூலத்தைப் பதிவுச் செய்தார்.
இராணுவ நல நிதியிலிருந்து 5 மில்லியன் ரிங்கிட்டை, நல வாரியத்தின் ஒப்புதல் இல்லாமல், Precious Amber International Bhd என்ற நிறுவனத்தில் முதலீடு செய்ததாக ஃபௌஸி மீது குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த 2023-ஆம் ஆண்டு, நவம்பர் 27-ஆம் தேதி, ஜாலான் பாடாங் தேம்பாவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இக்குற்றத்தை அவர் புரிந்ததாக நம்பப்படுகின்றது.
நம்பிக்கை மோசடிக்கான குற்றவியல் சட்டம் பிரிவு 409-இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இக்குற்றச்சாட்டுக்களானது நிரூபிக்கப்பட்டால், இரண்டு முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், பிரம்படி மற்றும் அபராதமும் விதிக்கப்படலாம்.








