ஜார்ஜ்டவுன், ஜனவரி.30-
பினாங்கின் தஞ்சோங் புங்கா மற்றும் பத்து பெரிங்கி பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடற்கரை அரிப்புக்கு, நிலமீட்பு பணிகள் காரணமல்ல, கடல் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுவதே முக்கியக் காரணம் என மாநில உள்கட்டமைப்பு குழுத் தலைவர் ஸைரில் கீர் ஜொஹாரி தெரிவித்துள்ளார்.
வழக்கத்தை விட இரண்டு அடி உயரத்தில் எழும்பிய அலைகள் மற்றும் பலத்த காற்று காரணமாக மணல் மூட்டைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக, நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை அறிக்கையை மேற்கோள் காட்டி அவர் விளக்கமளித்தார்.
நிலமீட்புப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகளுக்கு உட்பட்டே மணல் கொண்டு வரப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், 12-வது மலேசியத் திட்டத்தின் கீழ் பத்து பெரிங்கி பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை உறுதிப்படுத்தினார். இந்த அரிப்பினால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.








