குவாந்தானில், சுல்தான் ஹாஜி அஹ்மாட் ஷா பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த 19 வயது எம். எலிசா ஜோனோவா கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது காதலரான 19 வயது எஃப். ஏலன் ஸ்டீவ்குமார் மீது நேற்று திங்கட்கிழமை குவாந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி ஜாலான் ஆயர் பூத்தே 2-இல் உள்ள ஒரு வீட்டில் இக்கொலை நிகழ்ந்ததாகக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அதைப் புரிந்து கொண்டதாக தலையசைத்த ஏலன் ஸ்டீவ்குமாரிடம், குற்றத்தை ஒப்புக் கொள்கிறாரா? என்பது குறித்து வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி துவான் ருஸுஅய்னி துவான் லா, அடுத்த விசாரணையை நவம்பர் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
குற்றவியல் சட்டம் 302-ஆவது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரண தண்டனையோ அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ விதிக்கப்படலாம்.








