Oct 13, 2026
Thisaigal NewsYouTube

3R விவகாரங்களை சமூக ஊடகப் பிரபலங்கள் தவிர்க்க வேண்டும் – துணை அமைச்சர் அறிவுறுத்தல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
3R விவகாரங்களை சமூக ஊடகப் பிரபலங்கள் தவிர்க்க வேண்டும் – துணை அமைச்சர் அறிவுறுத்தல்

இனம், சமயம், மாமன்னர் தொடர்பான 3R விவகாரங்களை, குறிப்பாக மதச் சடங்குகள் தொடர்பான பிரச்சினைகளை, சமூக ஊடகப் பிரபலங்கள் தங்களின் இணைய உள்ளடக்கத்திற்காகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என தேசிய ஒற்றுமைத்துறை துணை அமைச்சரும், சிகாமட் நாடாளுமன்ற உறுப்பினருமான யுனேஸ்வரன் ராமராஜ் வலியுறுத்தியுள்ளார்.

பல்லின மக்கள் வாழும் மலேசியாவில் நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் வகையில், அதிகமான பின் தொடர்பாளர்களைக் கொண்டவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

சிலாங்கூர் மாநிலம் பத்துமலையில் நடைபெற்ற தைப்பூச கொண்டாட்டத்தின் போது, ஒரு சமூக ஊடகப் பிரபலம் மதச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் காணொளி வைரலானது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், மதச் சடங்குகள் தொடர்பான விவகாரத்தை அமைச்சு தீவிரமாகக் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை மத அதிகாரிகளும் போலீசாரும் மேற்கொண்டு வருவதால், பொதுமக்கள் அவசரமாகத் தீர்ப்பளிக்கவோ அரசியலாக்கவோ வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சமூக ஊடகப் பிரபலங்கள் தேசிய ஒற்றுமை அமைச்சுடன் இணைந்து கூட்டரசு அரசியலமைப்பு, ருக்குன் நெகாரா மற்றும் தேசியக் குடியுரிமை விழிப்புணர்வுத் திட்டம் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கிடையில், வேறொரு மதத்தின் சடங்கில் முஸ்லிம் ஒருவர் பங்கேற்றதாகக் கூறப்படும் வைரல் பதிவைத் தொடர்ந்து, இஸ்லாமியச் சட்டத்தை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை தொடங்கியுள்ளதாக சிலாங்கூர் இஸ்லாமிய சமய விவகாரத் துறை ஜாயிஸ் (JAIS) நேற்று உறுதிப்படுத்தியது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →