கேடிஎம் கொமுட்டர் ரயில்களில் 30 நாட்களுக்கு வரம்பற்ற பயணங்களை மேற்கொள்ளும் வகையில், மாதம் 50 ரிங்கிட் கட்டணத்தில் மைகொமுட்டர்50 பயண அட்டை வரும் டிசம்பர் 1-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படலாம்.
தொழில்நுட்ப ஏற்பாடுகள் தாமதமானால், இத்திட்டம் அவரும் 2027 -ஆம் ஆண்டு, ஜனவரி 1-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் எனப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
இந்தப் பயண அட்டையைப் பெற மலேசியர்கள் தங்களின் மைகாட் அடையாள அட்டையைப் பயன்படுத்தினால் போதுமானது.
இத்திட்டத்தின் மூலம் தஞ்சோங் மாலிம்-கோலாலம்பூர் வழித்தடப் பயணிகளுக்கு மாதம் 366 ரிங்கிட் வரையும், சிரம்பான்-கோலாலம்பூர் பயணிகளுக்கு 300 ரிங்கிட் வரையும் சேமிப்பு கிடைக்கலாம்.
அதேவேளையில் அலோர் ஸ்டார்-பட்டர்வொர்த் வழித்தடத்தில் பயணிப்போருக்கு 250 ரிங்கிட் வரையும், குளுவாங்-ஜோகூர் பாரு இடையே கேடிஎம் ஷட்டல் செலாத்தான் சேவையைப் பயன்படுத்துவோருக்கும் மாதம் 200-க்கும் அதிகமான சேமிப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2027 வரவு செலவுத் திட்டத்தை கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி தாக்கல் செய்தபோது பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்தத் திட்டத்தை முதன்முதலில் அறிவித்தார்.
இத்திட்டத்தின் மூலம் சுமார் 40,000 பயணிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கிடையில், 2027-ஆம் ஆண்டு ரயில் சேவைகளை மேம்படுத்தவும் கேடிஎம்பி திட்டமிட்டுள்ளது.
வடக்கு வழித்தடத்தில் ஈப்போ-பட்டர்வொர்த் மற்றும் பட்டர்வொர்த்-பாடாங் பெசார் இடையே 12 புதிய ரயில் பெட்டித் தொகுதிகள் 2027 பிப்ரவரி மாதத்தில் சேவையில் ஈடுபடுத்தப்படலாம்.
கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் ரயில் சேவைகளின் பயண இடைவெளியையும் படிப்படியாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








