காஜாங், ஜாலான் நீலாம் 2 சாலையில் நேற்று மாலை ஏற்பட்ட நிலச்சரிவில் 3 கார்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் மண்ணில் புதைந்தன.
எனினும், இச்சம்பவத்தில் உயிரிழப்புகளோ காயங்களோ ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று மாலை சுமார் 5 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தையடுத்து, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை ஆய்வு செய்து கண்காணிக்க உலு லங்காட் மாவட்ட உள்நாட்டு தற்காப்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
அங்கு இந்த நிலச்சரிவால் வீடுகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
மேலும், மீண்டும் நிலச்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பதைக் கண்டறிய போலீசாரும், காஜாங் நகராட்சி மன்ற அதிகாரிகளும் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.








