Oct 13, 2026
Thisaigal NewsYouTube

சட்டவிரோத வணிக நடவடிக்கைகள்: 25,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சட்டவிரோத வணிக நடவடிக்கைகள்: 25,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் கைது

நாடு முழுவதும் சட்டவிரோத வணிக நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த 2024-ஆம் ஆண்டு முதல் 2026 செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 25,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை உள்துறை அமைச்சு, நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இக்காலகட்டத்தில் குடிநுழைவுத் துறை மொத்தம் 12 ஆயிரத்து 343 சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

வணிக மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களைக் குறிவைத்து ஓப் பெலாஞ்சா, நடைபாதை வியாபார நடவடிக்கைகளைக் குறிவைத்து ஓப் ஜாஜா, உணவகங்கள் மற்றும் உணவு தயாரிப்பு இடங்களைக் குறிவைத்து ஓப் செலேரா ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் ஓப் பெலாஞ்சா நடவடிக்கையில் ஆவணங்களற்ற 5,809 வெளிநாட்டினரும், 471 முதலாளிகளும், ஓப் ஜாஜா நடவடிக்கையில் 734 வெளிநாட்டினரும் 40 முதலாளிகளும் கைது செய்யப்பட்டனர்.

அதிகபட்சமாக ஓப் செலேரா நடவடிக்கையில் ஆவணங்களற்ற 19,301 வெளிநாட்டினரும் 1,341 முதலாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றும், போதிய ஆதாரங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட சட்டங்களின்படி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படலாம் அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →