ஜோகூர், சிகாமட்டில் மூன்று இந்தியர்களின் உயிரைப் பலிவாங்கிய கோர விபத்தை அடுத்து, சம்பந்தப்பட்ட டிரெய்லர் லாரி நிறுவனத்தின் உரிமத்தை நிலப் பொதுப் போக்குவரத்து ஏஜென்சியான APAD ரத்து செய்துள்ளது.
கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி நிகழ்ந்த இந்த விபத்தில், தம்பதியினரான 71 வயது கே. மாயகிருஷ்ணன், 65 வயது எஸ். செவந்தை மற்றும் செவந்தையின் சகோதரரான 77 வயது எஸ். பழனியாண்டி ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களுடன் வேனில் பயணம் செய்த மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
விசாரணையில், 'எம்.எஃப்.ஜி பரோக்கா என்டர்பிரைஸ்' நிறுவனம் வாகனப் பராமரிப்பில் அலட்சியமாக இருந்ததும், ஓட்டுநர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கத் தவறியதும் கண்டறியப்பட்டது. மேலும், அந்த நிறுவனத்தின் லாரிகள் ஏற்கனவே பலமுறை வேக வரம்பை மீறி போக்குவரத்து விதிகளை மீறியதும் தெரியவந்துள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்த காரணத்தினால், 2010-ஆம் ஆண்டு தரைப் பொதுப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் அந்த நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய அபாட் (APAD) குழு நேற்று முடிவெடுத்தது.








