அலோர் ஸ்டார், ஜனவரி.11-
கெடா மாநிலத்தில் மாணவர்களிடையே நிலவும் சமூகச் சீரழிவு குறித்த பகீர் தகவலை வெளியிட்ட அம்மாநில காவற்படைத் தலைவர் டத்தோ அட்ஸி அபு ஷா, 2024-ல் வெறும் 10-ஆக இருந்த பகடிவதை வழக்குகள், 2025-ல் 43-ஆக அதிரடியாக உயர்ந்துள்ளதாக எச்சரித்துள்ளார்! இதைவிடப் பேரதிர்ச்சியாக, கடந்த ஆண்டில் மட்டும் பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட 90 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 78 வழக்குகள் இடைநிலைப் பள்ளி மாணவர்களையும், 12 வழக்குகள் தொடக்கப் பள்ளி மாணவர்களையும் உள்ளடக்கியது என்பது நெஞ்சைப் பதற வைக்கிறது.
கண்காணிப்பற்ற சுதந்திரமான நட்பு, தார்மீக விழுமியங்களின் சரிவு, நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்துவது போன்றவையே இத்தகைய பாலியல் குற்றங்களுக்கு முக்கியக் காரணங்களாக சிஐடி - D11 பிரிவின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சிறுவர்கள் அல்லது மாணவர்கள் என்ற சலுகை இன்றி, குற்றம் புரிந்த 31 பேர் கைது செய்யப்பட்டு 11 பேர் மீது ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில், சட்டத்தின் பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது என டத்தோ அட்ஸி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"உங்கள் உடலைத் தொடவோ அல்லது உங்களை வற்புறுத்தவோ யாருக்கும் உரிமை இல்லை" என்று மாணவர்களுக்கு அறிவுறுத்திய டத்தோ அட்ஸி, 2026-ஆம் கல்வி ஆண்டு இத்தகைய கறைகள் இல்லாத ஆண்டாக அமைய ஆசிரியர்களும் பெற்றோர்களும் கைகோர்க்க வேண்டும் என உருக்கமாகக் கேட்டுக் கொண்டார்.








