கோலாலம்பூர், டிசம்பர்.05-
மலாக்கா துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டு இருந்த போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று இந்தச் சம்பவத்தில் மூன்று இந்திய இளைஞர்களைப் பலி கொடுத்துள்ல குடும்பங்களின் சார்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜன் கேட்டுக் கொண்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வெளிப்படையான விசாரணையை நடத்துமாறு போலீஸ் படைக்குப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விசாரணை நடைபெற்று முடியும் வரையில் மூன்று இந்திய இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற நடவடிக்கையில் சம்பந்தப்பட்டு இருந்த போலீஸ்காரகர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று வழக்கறிஞர் ராஜேஸ் வலியுறுத்தினார்.
மேலும் இந்த மூன்று இந்திய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட முறை மரணத் தண்டனையை நிறைவேற்றும் தன்மையில் நடந்துள்ளது. எனவே இது குறித்து விசாரணை செய்வதற்கு அரச விசாரணை ஆணையம் ஒன்றை அமைப்பதற்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் உத்தரவிட வேண்டும் என்று ராஜேஸ் கேட்டுக் கொண்டார்.
கடந்த நவம்பர் 24 ஆம் தேதி மலாக்காவில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 21 வயது எம். புஷ்பநாதன், 24 வயது T. புவனேஸ்வரன் மற்றும் 29 வயது ஜி. லோகேஸ்வரன் ஆகியோர் உயிரிழந்தனர்.








