Sep 25, 2026
Thisaigal NewsYouTube
மைகோவ் செயலியில் பிஃபா உலகக் கிண்ணக் காற்பந்து இலவச நேரலை
தற்போதைய செய்திகள்

மைகோவ் செயலியில் பிஃபா உலகக் கிண்ணக் காற்பந்து இலவச நேரலை

Share:

மலேசியாவின் மைகோவ் செயலியைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை 2.2 மில்லியனுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இது 2030 ஆம் ஆண்டுக்குள் மலேசியாவை ஒரு செயற்கை நுண்ணறிவு நாடாக (ஏஐ நேஷன்) உருமாற்றும் தேசிய இலக்கை அடைய பெரிதும் துணை புரிகிறது. இந்தத் தளம் பொதுச் சேவைத் துறையின் இலக்கவியல் உருமாற்றத்தை வலுப்படுத்த, கட்டங்கட்டமாக புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த 2025 ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் செயலி, தற்போது 19 அரசு நிறுவனங்களைச் சேர்ந்த 51 சேவைகளை ஒரே தளத்தில் வழங்கி வருகிறது. இதில் மைசெஜ்தெரா, மைஜேபிஜே, பிரைஸ்கேட்சர், போர்ட்டல் மான்பாட் மற்றும் சும்பங்கான் துனாய் ரஹ்மா (எஸ்டிஆர்) ஆகிய முக்கிய அரசாங்க அமைப்புகளின் சேவைகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, இந்த வருட 2026 பிஃபா உலகக் கோப்பை காற்பந்து போட்டியையும் இலவசமாக, மைகோவ் செயலியில் எப்போது வேண்டுமானாலும், எங்கு இருந்தும் காணக்கூடிய நேரடி ஒளிபரப்பு வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மைடிஜிட்டல் ஐடி-யில் பதிவு செய்துள்ள பயனர்கள் தங்களது கைப்பேசிகள் வழியாக இதனை நேரலையாகக் காண இயலும். மலேசிய மக்களுக்கு அரசாங்கத்தின் இலக்கவியல் சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் அணுகச் செய்வதற்கான மடானி அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சியின் பிரதிபலிப்பாக இது விளங்குகிறது என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார். மேலும், இந்தத் துரித வளர்ச்சி மலேசிய இலக்கவியல் பொருளாதார வரைபடத்தின் (ஆர்டிஇடிஎம்) நோக்கங்களுடன் ஒத்திசைந்து, மக்களின் நன்மைக்காகவே செயல்படுகிறது என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related News