இணைய மோசடி கும்பலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மலேசியர்கள் சிலர் பாகிஸ்தான் நாட்டில் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல்களை விசாரணை செய்ய, புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையைச் சேர்ந்த சிறப்புக் குழு இஸ்லாமாபாத்-க்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து தேசிய போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ மோஹ்மத் காலித் இஸ்மாயில் வெளியிட்டுள்ள தகவலில், கைது செய்யப்பட்ட மலேசியர்களின் சரியான எண்ணிக்கையை தற்போது உறுதிப்படுத்த முடியாது என்றும், விசாரணை இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு நேரடியாகச் சென்று விசாரணை நடத்துவது போலீசாருக்கு இடையிலான ஒத்துழைப்புடன், இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பும் அவசியம் என உள்துறை அமைச்சர் நேற்று தமக்கு அறிவுறுத்தியதாக காலித் இஸ்மாயில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், முதற்கட்டமாக பாகிஸ்தான் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், இந்த மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நபர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய வலையமைப்பை மலேசிய போலீசார் தீவிரமாகக் கண்டறிந்து வருகின்றனர்.
இதனிடையே, இஸ்லாமாபாத் புறநகரில் உள்ள குல்பர்க் கிரீன் குடியிருப்புப் பகுதியில் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் மோசடி அழைப்பு மையத்தில் பாகிஸ்தான் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 258 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக அனைத்துலக ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டன.
கைது செய்யப்பட்டவர்களில் 40 சீனப்பிரஜைகள், 170 வியட்னாமிய பிரஜைகள் ஆகியோருடன் மலேசியர்கள் சிலரும், பிற ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, இணைய மோசடி நடவடிக்கைகளில் வெளிநாட்டவர்கள், குறிப்பாக சீனப் பிரஜைகள் அதிகளவில் ஈடுபடுவது தெரியவந்துள்ளதாக காலித் இஸ்மாயில் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில் மலேசியாவை மோசடி நடவடிக்கைகளுக்கான மையமாக மாற்ற முயன்றதாக சந்தேகிக்கப்படும் 182 வெளிநாட்டவர்கள் கடந்த மாதம் மட்டும் கைது செய்யப்பட்டிருப்பது, இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை வெளிப்படுத்துவதாகவும் காலித் தெரிவித்துள்ளார்.








