Sep 24, 2026
Thisaigal NewsYouTube
ரவுப் ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயத்தில் கைவரிசை காட்டிய திருடர்கள்: கும்பாபிஷேக விழாவில் 65 பவுன் தங்கம் கொள்ளை! அதிர்ச்சியில் பக்தர்கள்
தற்போதைய செய்திகள்

ரவுப் ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயத்தில் கைவரிசை காட்டிய திருடர்கள்: கும்பாபிஷேக விழாவில் 65 பவுன் தங்கம் கொள்ளை! அதிர்ச்சியில் பக்தர்கள்

Share:

ரவுப் ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயத்தில் நேற்று கோலாகலமாக நடைபெற்ற மஹா கும்பாபிஷேக விழாவை, மர்ம நபர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, பக்தர்களின் கழுத்தில் இருந்த சுமார் 65 பவுன் தங்க நகைகளைப் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்மீக விழாவில் கலந்து கொள்ள வந்த பக்தர்களின் கவனத்தைச் சிதறவிட்டு, மிகத் திட்டமிட்டுக் கூட்ட நெரிசலில் இந்தத் திருட்டுச் செயல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன.

நேற்று ஒரே நாளில் 11-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்கள் நகைகளை இழந்துள்ளனர். இதில், 7 பேர் துணிந்து போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் திருடப்பட்ட நகைகளின் மதிப்பு மட்டும் 2 லட்சத்திற்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்தத் துணிகரத் திருட்டுச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ரவுப் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் முகமட் ஷரீப் அப்துல் ரஹ்மான், “பக்தர்கள் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி இந்தத் திருட்டு நடந்துள்ளது. குற்றவியல் சட்டம் பிரிவு 379-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளை வேட்டையாடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது,” என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

திருவிழாக்காலங்களில் பக்தர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாததே இத்தகைய குற்றங்களுக்கு வழிவகுப்பதாக பொதுமக்கள் கொந்தளித்துள்ளனர்.

“ஆலய வளாகம் என்பது பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். ஆனால், இன்று மக்கள் அச்சத்துடன் விழாக்களில் பங்கேற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் ஆலயங்கள்

சிசிடிவி கண்காணிப்பைப் பலப்படுத்த வேண்டும்; அல்லது தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் உதவியை நாட வேண்டும்,” என பாதிக்கப்பட்டவர்கள் ஆவேசமாகத் தெரிவித்துள்ளனர்.

குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், திருட்டுச் சம்பவம் தொடர்பான கூடுதல் ஆதாரங்களோ அல்லது தகவல்களோ அறிந்தவர்கள், தாமதிக்காமல் ரவுப் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் 09-3552222 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளுமாறு அவசரமாகக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related News