ஈப்போ, அக்டோபர்.31-
பேராக் மாநிலம், தைப்பிங், தாமான் அஸ்ஸாமாராவில் உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது 2.87 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள, போதைப் பொருட்களைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த புதன்கிழமை, தைப்பிங், பொக்கோக் அசாம் சந்தையில், சந்தேகத்தின் பேரில், 39 வயதான ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதையடுத்து, அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவரது வீட்டில் 6 பாக்கெட்டுகளில் வைக்கப்பட்டிருந்த 5,067.3 கிராம் methamphetamine என்ற போதைப் பொருளையும், 84.75 லிட்டர்களில், போதைப் பொருட்கள் உருவாக்கப் பயன்படும் திரவத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இச்சோதனையின் போது, அவ்வீட்டில் இருந்த, அந்த ஆடவரின் 26 வயது மனைவியையும், போலீசார் கைது செய்ததாக, பேரா மாநில போலீஸ் தலைமை ஆணையர் டத்தோ நோர் ஹிசாம் நோர்டின் தெரிவித்துள்ளார்.








