போலீஸ் படையின் முன்னாள் துணைத் தலைவர் டான் ஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை, மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழக மலாக்கா எனப்படும் யுடிஇஎம்மின் (UTeM) இயக்குநர் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கான இந்த நியமனம் செப்டம்பர் 16-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காதிரின் ஒப்புதலுடன் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக யுடிஇஎம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம், பதவிக் காலம் நிறைவடைந்த டத்தோ ஹுசைனி ஓமாருக்குப் பதிலாக அயோப் கான் பொறுப்பேற்றுள்ளார்.
போலீஸ் படையில் சுமார் 35 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்ட அயோப் கான், ஜோகூர் போலீஸ் தலைவர், புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
அவரது தலைமைத்துவம் மற்றும் உயர் நிர்வாக அனுபவம், யுடிஇஎம்மின் நிர்வாகம் மற்றும் எதிர்கால வியூகத் திட்டங்களை வலுப்படுத்தும் என பல்கலைக்கழகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.








