பகாங் மெந்தகாப் ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் பரிபாலன சபாவின் ஏற்பாட்டில் அக்டோபர் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை மணி 7.00 மணி தொடங்கி மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா நடைபெற உள்ளது.
அமுதால் உன்னைப் பெறலாமே எனும் கருபொருளில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
மாணிக்க வாசகர் பெருமான் அருளிச்செய்த திருவாசகத்தின் பெருமையையும் சிறப்பையும் தமிழர்களுக்கு உணரச் செய்வதோடு சிவபெருமானே பரம்பொருள் என்ற உண்மையை தமிழர்கள் உணர வேண்டும் எனும் நோக்கில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதாக மெந்தகாப் ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் பரிபாலன சபா குறிப்பிட்டது.
அதே சமயம், திருவாசகம் முற்றோதல் என்பது ஒரே நாளில் 658 திருவாசகப் பாடல்களை முழுவதுமாகப் பாடுகின்ற ஒரு பெரும் நிகழ்ச்சியாகும். ஆகையால், சிவனடியார் பெருமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் வருகை தந்து மாணிக்கவாசகர் குருவருளையும் சிவபெருமானின் திருவருளையும் பெற்றுய்யுமாறு கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த மாபெரும் நிகழ்ச்சிக்கு சிங்கப்பூர் சைவ சித்தாந்த சங்கத் தலைவர் சிவத்திரு. மீனாட்சி சபாபதி சிறப்பு வருகையளிக்க இருக்கிறார்.
இந்த முற்றோதல் நிகழ்ச்சிக்கு வரும் அடியார்கள் அனைவரும் திருவாசக புத்தகத்தைக் கொண்டுவருமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.








